குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை... இணையதள சேவை முடக்கம்

Citizenship Bill will pass Rajya Sabha test, Northeast shuts down in protest

by எஸ். எம். கணபதி, Dec 11, 2019, 12:57 PM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் டிச.9ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால், மசோதா எளிதாக நிறைவேறியது.

இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் நடத்தப்படுகிறது. மொத்தம் 245 உறுப்பினர் கொண்ட இந்த அவையில் தற்போது 238 பேர் உள்ளனர். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியைத் தவிர அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலுங்குதேசம், டி.ஆர்.எஸ் உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எனவே, 128 பேர் வரை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை உள்ளது. இதனால், மாநிலங்களவையிலும் குடியிருப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தி போட்டு, சாலைகளை மறித்துள்ளனர். இதனால், பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமரூப் மாவட்டத்தில் 2 பேருக்கும் அதிகமானோர் ஒரு இடத்தில் கூடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்்ளது.

திரிபுராவிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. திரிபுராவில் வதந்திகளால் போராட்டங்கள் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு மொபைல் இணையதள சேவை, எஸ்.எம்.எஸ் வசதி உள்பட அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 2 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்திலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

You'r reading குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை... இணையதள சேவை முடக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை