தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, புதுடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கே சென்று போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
புதுடெல்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம், கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது, ஆம் ஆத்மிஎம்.எல்.ஏ.க்கள் சிலர் அன்ஷூ பிரகாஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிவில் லைன் போலீசில், தலைமை செயலாளர் அன்ஷூ பிர காஷ் புகார் அளித்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்டோரை புதுடெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில்தான், வெள்ளிக்கிழமையன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நுழைந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு சோதனையிட்டுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கெஜ்ரிவால் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும், கெஜ்ரிவால் உதவியாளர் வி.கே. ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர், தில்லி தலைமைச் செயலாளரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கியதைத், தான் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். ஜெயினின் வாக்கு மூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து புதுடெல்லி அரசின் செய்தித் தொடர்பாளர் அருணோதயா கூறுகையில், “தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் இல்லத்திற்கு உள்ளேயே போலீசார் அத்துமீறிச் செல்ல முடியும் என்றால், ஏழை மக்களின் நிலை என்னவாக இருக்கும், என்று யோசித்து பாருங்கள்?” என்று தெரிவித்துள்ளார்.