ரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்?

by எஸ். எம். கணபதி, Dec 13, 2019, 13:25 PM IST
Share Tweet Whatsapp

ரேப் இன் இந்தியா என்று சொன்னதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜகவினர் கோருகின்றனர். ஆனால், ராகுல்காந்தி பதிலுக்கு, ரேப் கேபிடல் டெல்லி என்று மோடி பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா என்று சொன்னார். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? ரேப் இன் இந்தியா என்று ஆகி விட்டது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதற்கு பிறகு அந்த பெண் விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தைப் பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை.. என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை பாஜக கையில் எடுத்து கொண்டது. மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த பிரச்னையை கிளப்பி ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி எப்படி, ரேப் இன் இந்தியா என்று சொல்லலாம்? இந்தியாவில் எல்லோரையும் ரேப் பண்ணச் சொல்லுகிறாரா? இந்திய பெண்களை அவ்வளவு மட்டமாக நினைக்கிறாரா? அவர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.

ஆனால், பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பகல் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் பாஜக உறுப்பினர்களின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டியில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அதை திசைதிருப்ப பாஜக அரசு இப்படி செய்கிறது. நான் மோடி முன்பு பேசிய வீடியோ கிளப்பை வெளியிடுகிறேன். மோடி அதில், ரேப் கேபிடல் டெல்லி என்று பேசியிருக்கிறார். அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


Leave a reply