ஆந்திராவை ஜெகன் அரசு, பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இது துக்ளக் அரசாக செயல்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தற்போது சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று காலையில் சட்டசபை அருகே நூதனப் போராட்டம் நடத்தினர்.
சந்திரபாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், ஜெகன் அரசை கண்டித்து பின்னோக்கி நடந்தபடி சட்டசபைக்கு வந்தனர். அதன்பின், செய்தியாளர்களிடம் சந்திரபாபு கூறியதாவது:
ஆந்திராவை ஜெகன் அரசு பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. 2 லட்சம் கோடி தலைநகர் அமராவதி திட்டத்தை கொலை செய்து விட்டார்கள். புதிய தலைநகர் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். இப்போது ஆந்திரா, தலைநகர் இல்லாத மாநிலமாகி விட்டது.
பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்துள்ளனர்.
ஜெகன் அரசு மிக மோசமான துக்ளக் அரசாக செயல்பட்டு வருகிறது. இதனால், ஆந்திராவில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தயங்குகிறார்கள். முதலீடுகள் வருவது குறைந்து விட்டது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.