ஜார்கண்ட் தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு..

by எஸ். எம். கணபதி, Dec 20, 2019, 09:05 AM IST

ஜார்கண்டில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(டிச.20) காலை 7 மணிக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்படுகிறது.

ஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. நவ.30ல் தொடங்கிய டிச.16க்குள் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

முதல் கட்டமாக, கடந்த நவ.30ம் தேதியன்று சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேகர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 4 கட்டங்களில் 65 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
இறுதிகட்டமாக இன்று 16 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. போரியோ, பர்கயத், லிட்டிபுரா, மகேஷ்பூர், சிகாரிபரா ஆகிய தொகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் மாலை 3 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்படும். மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகின்றன. ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்திமோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

ஆளும் பாஜக முதல்வர் ரகுபர்தாஸ் கூறுகையில், தாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்றார். அவரது தொகுதியில் முன்னாள் அமைச்சர் சர்யூராய் அதிருப்தி வேட்பாளராகி சுயேச்சையாக போட்டியிடுவது அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

You'r reading ஜார்கண்ட் தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை