பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனை சுற்றி வரும் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியன் மறைகிறது. இப்படி சூரியன் மறையும் நேரம்தான் சூரிய கிரகணம்.
இதில், சூரியன் முழுமையாக மறையாமல், நடுப்பகுதி மட்டும் மறைந்து சூரியனை சுற்றி ஒரு சிவப்பு வட்டம் தோன்றும். இதை வளைய சூரிய கிரகணம் என்பார்கள். இன்று அந்த சூரியகிரகணம்தான் ஏற்பட்டது.
இந்த சூரியகிரகணத்தை, இந்தியாவில் ஒடிசா, குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நன்றாக பார்க்க முடிந்தது. கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் சூரியனை சந்திரன் மறைத்த காட்சி நன்றாக தெரிந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நன்றாக பார்த்துள்ளனர். அதே போல், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள், சூரியகிரகணத்தை நன்றாக பார்த்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு சூரிய கிரகணம் தெரிவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கருப்பு கண்ணாடி அணிந்து வானத்தைப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதவில், நிறைய இந்தியர்களைப் போல் நானும் ஆர்வத்துடன் சூரியகிரகணத்தைப் பார்த்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக மேகமூட்டம் காரணமாக என்னால் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. அதே சமயம், கோழிக்கோடு மற்றும் பல இடங்களில் தெரிந்த காட்சிகளை கவனித்தேன். மேலும், பல நிபுணர்களிடம் கலந்துரையாடி இந்த சூரியகிரகணம் பற்றிய அறிவை வளர்த்து கொண்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் உற்சாகமாகி, பிரதமரின் இந்த ட்விட்டை வைத்து ஏராளமான மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.