தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவதால், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) கொண்டு வரப்படும் என்றும், அதன்மூலம் சிறுபான்மையினர் குடியுரிமையை இழப்பார்கள் என்றும் மக்களிடம் அச்சம் காணப்படுகிறது. இதனால், என்.ஆர்.சி வந்தால் அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரதமர் மோடியும் இது வரை என்.ஆர்.சி பற்றி விவாதிக்கவே இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் என்.ஆர்.சி நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று 8 முறை கூறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
என்.ஆர்.சி பற்றி இதுவரை விவாதிக்கவே இல்லை என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும், என்.ஆர்.சி கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம், நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்புதான் என்.ஆர்.சி தயாரிக்கப்படும்.
முதலில், என்.ஆர்.சி தயாரிப்பதற்கான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, விதிமுறைகள் வகுக்கப்படும். அதன்பிறகு, ரிஜிஸ்திரார் ஜெனரல் அரசு கெசட்டில் நோட்டிபிகேஷன் வெளியிடுவார். அதில் கால அட்டவணை குறிப்பிடப்படும். இவை எல்லாமே முறைப்படி ஆலோசிக்கப்பட்ட பிறகே செயல்படுத்தப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்பது தவறு. சரியாகவே அந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. சில மறைமுக சக்திகள் வேண்டுமென்றே இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களையும், வன்முறைகளையும் தூண்டி விடுகின்றன.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.