டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜே.என்.யு மாணவர்களை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யு) கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் பல்கலைக்கழகத்தின் சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த 18 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இது பற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்றிரவு 10 மணியளவில் அங்கு வந்தார். அவர் அங்கு மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரிடம் மாணவர்கள், தங்களை தாக்கியவர்கள் குறித்து முறையீடு செய்தனர்.