இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தது அவசியமற்றது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம், முஸ்லிம்களை மட்டும் புறக்கணித்து சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக கூறி, நாடு முழுவதும் ஆங்காங்கே ேபாராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அபிதாபியில் வளைகுடா செய்தி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், இந்தியா எதற்காக இந்த புதிய குடியுரிமை சட்டத்தை ெகாண்டு வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சட்டமே தேவையற்றது. அதே போல், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம்(என்.ஆர்.சி) பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். அது அவர்களது உள்நாட்டு விவகாரம் என்றும், அந்த சட்டத்தால் வங்கதேசத்து மக்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்றும் உறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.