அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகர்மன்றத்தில் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்த முஸ்லிம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் இந்த சட்டத்திற்கு வெளிநாடுகளிலும் கூட எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கவுன்சில் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் தீவிர முயற்சியால் இந்த தீர்மானம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான சியாட்டில் நகரின் நகர்மன்றக் கூட்டத்தில் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று(பிப்.3) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டமும் முஸ்லிம்களுக்கு எதிரானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதால், அதை சியாட்டில் நகர்மன்ற கவுன்சில் கண்டிக்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்திய அமெரிக்க சிட்டி கவுன்சில் உறுப்பினர் ஷாமா சவந்த் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இது குறித்து இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் தலைவர் அசன்கான் கூறுகையில், மதச்சுதந்திரத்தையும், பன்முகத்தன்மையையும் பறிக்க முயல்வோருக்கு சியாட்டில் கவுன்சில் தீர்மானம் ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். வெறுப்புணர்வுடன் கொண்டு வரப்படும் சட்டத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்றார்.