ஷாகீன்பாக் போராட்டம்.. பிப்.10ல் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

by எஸ். எம். கணபதி, Feb 7, 2020, 13:45 PM IST

டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள்.

டெல்லியில் நாளை(பிப்.8) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஷாகீன்பாக் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து பாஜகவினர் பேசிவந்தனர்.

இந்நிலையில், ஷாகீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. நாங்கள் உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அமித்சஹானி என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஷாகீன்பாக் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் அமித்சஹானி வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அங்கு ஏதோ பிரச்னை இருக்கிறது. அதை விசாரிக்கலாம். வரும் 10ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்றனர்.

அதற்கு வழக்கறிஞர் அமித்சஹானி, அதற்குள் டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிந்து விடும் என்றார். நீதிபதிகள், நாங்களும் அதற்காகத்தான் சொல்கிறோம். இது தேர்தலுக்காக விசாரிக்க வேண்டியதல்ல. அது முடிந்த பிறகே விசாரிக்கலாம் என்றனர்.

You'r reading ஷாகீன்பாக் போராட்டம்.. பிப்.10ல் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை