அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து அந்நாட்டு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர்கள் இன்று(பிப். 24) காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விமானம் அருகே சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். மெலனியாவுக்கு கைகுலுக்கி வரவேற்றார். டிரம்ப், விமானத்தில் இறங்கியது முதல் இருபுறமும் நடனக் கலைஞர்கள் வரிசையாக நின்று பாட்டுப் பாடி ஆடியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்கள் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மோட்டோரா ஸ்டேடியத்திற்கு செல்கின்றனர்.
அங்குப் பிரதமர் மோடியும் கலந்து கொள்ளும் நமஸ்தே டிரம்ப் என்ற பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.