தெலங்கானாவில் மக்களிடம் சிக்கன் வதந்தியால் ஏற்பட்ட பயத்தை போக்குவதற்காக அமைச்சர்கள் மேடை போட்டு சிக்கன் சாப்பிட்டனர்.
உலகை இப்போது அச்சுறுத்தி வருவது சீனா வைரஸ் நோயான கொரோனா வைரஸ்தான். சீனாவில் மட்டும் இந்நோய் தாக்கி 2,800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நோய் வேகமாகப் பரவக் கூடியது. தற்போது பல நாடுகளிலும் இது பரவியிருக்கிறது. இதனால், உலக சுகாதார நெருக்கடி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் கோழிக்கறி மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியது. இதனால், கோழிக்கறி(சிக்கன்) மற்றும் முட்டை சாப்பிடுபவர்கள் பீதியடைந்தனர். இதைத் தொடர்ந்து, கோழிக்கறி, முட்டை விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்தது. வியாபாரிகள் நஷ்டமடைந்தனர்.
இதன் காரணமாக, தனியார் பிராய்லர் சிக்கன் நிறுவனம் ஒன்று மக்களிடம் பீதியை போக்குவதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.டி.ராமாராவ், எடல்ல ராஜேந்தர், தலசானி சீனிவாஸ் யாதவ் உள்படப் பலர் பங்கேற்றனர். அவர்கள் பொதுக் கூட்ட மேடையில் நின்றவாறு, சிக்கன் லெக் பீஸ் எடுத்து கடித்து சுவைத்தனர். அதன்பின், பார்வையாளர்களுக்கும் இலவசமாக சிக்கன் துண்டுகள் வழங்கப்பட்டன. அனைவரும் இலவசமாக கோழிக்கறி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.