நாடாளுமன்றத்தில் ரகளை.. விருதுநகர் எம்பி உள்பட 7 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

by எஸ். எம். கணபதி, Mar 6, 2020, 11:04 AM IST

சபாநாயகரின் மேஜையிலிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்த விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் உள்பட 7 காங்கிரஸ் உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி கூடியது. அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். தொடர்ந்து, மத்திய அரசின் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்களின் மோதலால், டெல்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்ததைச் சபாநாயகர் ஏற்கவில்லை. இரு அவைகளிலும் அந்த பிரச்சினையை விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. இதையடுத்து, அந்த பிரச்சினையை விவாதித்தால் மட்டுமே அவையை நடத்த விடுவோம் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தாலும் பலன் ஏற்படவில்லை. இதனால் வருத்தமடைந்த சபாநாயகர் ஓம்பிர்லா கடந்த 2 நாட்களாக மக்களவைக்கு வரவில்லை.

மாற்றுத் தலைவர்களான பித்ருஹரி மகதாப், ராஜேந்திர அகர்வால், ரமாதேவி, மீனாட்சி லேகி ஆகியோர் சபையை நடத்தினர். மக்களவை நேற்று கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வழக்கம் போல் நீதி வேண்டும்” என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையிலிருந்த பித்ருஹரி மக்தாப், அவையை 12 மணிவரை ஒத்தி வைத்தார்.

12 மணிக்குச் சபை கூடியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வாசித்தார். இந்த விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்ட எம்.பி.க்கள் பேசினர். அப்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் உறுப்பினர் அனுமான் பெனிவால் பேசுகையில் சோனியா, ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிட்டு ஏதோ சொல்லவே காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சர்ச்சைக்குரிய கருத்து சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எனினும், காங்கிரசார் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால்,
பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய போது, மாற்று சபாநாயகர் ரமாதேவி, சபையை நடத்தினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும், அவையைச் சபாநாயகர் தொடர்ந்து நடத்தினார். அரசு தரப்பில் கனிம திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற முயன்றனர். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் சபாநாயகர் மேஜையிலிருந்த ஆவணங்களைக் கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சபை மீண்டும் 3 மணிக்குக் கூடியபோது மீனாட்சி லேகி சபையை நடத்தினார். அவர் கூறுகையில், “சபாநாயகர் மேஜையிலிருந்த காகிதங்களைக் காங்கிரஸ் எம்.பி.க்கள் குர்ஜித்சிங் ஆஜிலா, பேகனான் பென்னி, கவுரவ் கோகாய், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன், மாணிக்தாகூர்(விருதுநகர் எம்.பி.) ராஜ்மோகன் உன்னிதான் ஆகியோர் கிழித்து வீசி எறிந்தனர், இந்த செயலுக்கு சபை கண்டனம் தெரிவிக்கிறது” என்றார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த உறுப்பினர்கள் சபாநாயகரை அவமதித்து விட்டதால், அவர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரினார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால், மாணிக்தாகூர் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்களும், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபைக்குச் செல்ல முடியாது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை