மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமித்ஷாவின் அட்டகாச அரசியல் நாடகங்கள் ஆரம்பித்துள்ளது. அம்மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக தொடங்கியுள்ளது. ம.பி.யில் மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. பாஜக ஏற்பாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், பெங்களூருக்குச் சென்று, அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். பின், காங்கிரசில் இருந்து விலகினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். நேற்றிரவு மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை அறிவித்தனர்.
இதன்பின்னர், பாஜகவைச் சேர்ந்த பூபேந்திர சிங், பெங்களூருவில் இருந்து 19 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களைப் பெற்று வந்தார். அவற்றுடன் 3 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களையும் வாங்கிக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நாரோட்டம் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவற்றை எடுத்து கொண்டு சென்று சபாநாயகர் என்.பி.பிரஜாபதியிடம் அளித்தனர்.
அந்த கடிதங்களைப் பெற்ற சபாநாயகர் பிரஜாபதி, சட்டவிதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். கர்நாடகாவில் இதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திச் சென்று கோவாவில் வைத்துக் கொண்டு, ராஜினாமா கடிதங்களை அளித்தது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த சபாநாயகர் ரமேஷ்குமார் அவற்றின் மீது முடிவெடுக்காமல் வைத்திருந்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது கூட, என்னால் அவசரமாக முடிவெடுக்க முடியாது. அதற்கு நீதிமன்றம் உத்தரவிடவும் அதிகாரம் இல்லை என்றார். கடைசியில், அந்த ராஜினாமாக்களை ஏற்காமல் அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார். இதனால், மத்தியப் பிரதேச அரசியலில் அதே போன்ற குழப்பச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை ம.பி. அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.