ஜோதிராதித்ய சிந்தியா தனது கொள்கைகளை பாக்கெட்டில் போட்டு விட்டு, ஆர்.எஸ்.எஸ் பின்னால் சென்று விட்டார் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மத்தியப்பிரதேச அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென பாஜகவுக்குத் தாவி விட்டார். அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகியுள்ளனர். அவர்களும் பாஜகவில் சேரவிருக்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:
ஜோதிராதித்ய சிந்தியா எனது பழைய நண்பர். அவரை எனக்குக் கல்லூரி நாட்களிலிருந்தே தெரியும். அவரது கொள்கைகள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து பயம் கொண்டு, தனது கொள்கைகளை பாக்கெட்டில் போட்டு விட்டு ஆர்.எஸ்.எஸ் பின்னால் சென்று விட்டார். அவருக்கு அங்கு நிச்சயம் மரியாதை கிடைக்காது. அது மட்டுமல்ல, அவரது உண்மையான உணர்வுகள் பாதிக்கும். இது காங்கிரஸ் கொள்கைக்கும், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்குமான மோதல் என்பதை அவர் விரைவில் உணர்வார்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.