மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறி, பாஜக ஆளும் மாநிலமான கர்நாடாகாவில் பெங்களூரு ரிசார்ட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் ராஜினாமா கடிதங்களைப் பெற்று வந்த பாஜக தலைவர்கள் அவற்றைச் சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைச் சபாநாயகர் ஏற்றால், கமல்நாத் அரசு மெஜாரிட்டி இழந்து விடும். ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.
இந்த குழப்பமான சூழலில், கமல்நாத் அரசு சட்டசபையில் இன்று(மார்ச்16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதியோ, இன்று சட்டசபையில் கவர்னர் லால்ஜி டாண்டன் உரை நடைபெறும் என்று தெரிவித்து விட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடவில்லை.
இதையடுத்து, முதல்வர் கமல்நாத்தை அழைத்த கவர்னர் லால்ஜி டாண்டன், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால், கமல்நாத்தோ, இது சபாநாயகர் செய்ய வேண்டிய விஷயம் என்று கேஷுவலாக பதிலளித்து விட்டுத் திரும்பினார்.
இன்று காலையில் ம.பி. சட்டசபை கூடியதும், கவர்னர் லால்ஜி டாண்டன் உரையாற்றினார். அந்த உரை முடிந்ததும், எல்லோரும் அரசியல் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், கவர்னர் லால்ஜி, சபையை விட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பார்கவா, முன்னாள் முதல்வர் சவுகான் உள்ளிட்ட பாஜகவினர் எழுந்து சபாநாயகரிடம், கவர்னர் உத்தரவுப்படி சட்டசபையில் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்குச் சபாநாயகர் பிரஜாபதி, கவர்னருக்கும் உங்களுக்கும் நடந்த தகவல் தொடர்புகளைக் கொண்டு நான் சபையை நடத்த முடியாது. கவர்னர் எனக்கு உத்தரவிடவில்லை. சபையை விதிகளின்படி நான் நடத்துவேன் என்று கூறி, வாக்கெடுப்பு நடத்த மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசு கொறடா கோவிந்த்சிங், கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டங்களைத் தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே, சட்டசபையை 10 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், சட்டசபைக் கூட்டத்தை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன்மூலம், கமல்நாத் அரசு தற்காலிகமாகப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது பாஜகவினருக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளில், சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது என்று கூறியிருக்கிறது. இதனால், சபாநாயகர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று கோர்ட் உத்தரவிடுமா என்பது சந்தேகத்திற்குரியது.