ம.பி. அரசியல் குழப்பம்.. சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

by எஸ். எம். கணபதி, Mar 17, 2020, 16:42 PM IST

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்துள்ள வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக இறங்கியது.

காங்கிரசில் இளம்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறினர். அவர்களை பாஜகவினர் அழைத்து சென்று, பாஜக ஆளும் கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர்.
சிந்தியா திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அடுத்து, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ம.பி. பாஜக தலைவர்கள் வாங்கிச் சென்று சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர்.

அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரை முதலமைச்சர் கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். இதையடுத்து, அந்த 6 பேரின் ராஜினாமாக்களை மட்டும் ஏற்று, எம்.எல்.ஏ. பதவியையும் சபாநாயகர் பிரஜாபதி பறித்தார். அதே சமயம், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பினார். நீங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்தீர்களா என்பதை நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் இருந்து திரும்பவில்லை.

இந்த சூழலில், கமல்நாத் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக பாஜக புகார் அளித்தது. இதனால், கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் கவர்னர் உரை முடிந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

கொரேனா வைரஸ் நோயை காரணம் காட்டி வரும் 26ம் தேதிக்கு சட்டசபையை ஒத்தி வைத்தார். அன்றுதான் ராஜ்யசபா தேர்தலும் நடைபெறுகிறது. அந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா அல்லது கட்சி மாறி வாக்களித்தால் பிரச்சினை வருமா அல்லது தகுதிநீக்கம் செய்யப்படுவார்களா என்ற குழப்ப நிலை உள்ளது.
இதையடுத்து, கமல்நாத் அரசு உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், சபாநாயகர் சட்டசபையை 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால், பெரிய அளவில் குதிரைப் பேரம் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மனு இன்று(மார்ச் 17) நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வருகிறது.

You'r reading ம.பி. அரசியல் குழப்பம்.. சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை