பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் அந்நாட்டில் 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். 82 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 258 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் தனி வார்டுகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நாளை(மார்ச்22) மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, மக்கள் தாங்களாகவே ஊரடங்கு பின்பற்ற வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. மாலை 5 மணிக்கு மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனியில் இருந்து 5 நிமிடம் கைதட்டி அல்லது மணி அடித்து, மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையடுத்து, தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், காய்கறி, மளிகைக் கடைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பஸ், ஆட்டோ, லாரி உள்பட போக்குவரத்தும் முழு அளவில் நிறுத்தப்படும் என கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்தாலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன. நாளை அந்த கடைகளும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்திருக்கிறார்.
இதையடுத்து, பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு என்பது பாரத் பந்த் போன்று நாளை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பந்த் என்றால் மாலை 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படும். ஆனால், நாளை இரவு வரை பந்த் நீடிக்கும்.