இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பலத்தைக் கொண்டு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். எனவே, அந்த நாடு இன்னும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி, மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 471 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ஜெ.ராயன் கூறியதாவது:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அனைத்து நாடுகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, 67 நாட்கள் கழித்துதான் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், அடுத்த 11 நாட்களில் 2வது ஒரு லட்சம் பேருக்கும், அடுத்த நான்கே நாட்களில் 3வது ஒரு லட்சம் பேருக்கும் இந்த நோய் பரவி விட்டது.
இந்தியாவும் சீனாவைப் போல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கும்.
எனவே, இந்தியா இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பலத்தைக் கொண்டு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும்.
இதே போல், மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் சக்தி உள்ளது.
இவ்வாறு மைக்கேல் ராயன் தெரிவித்தார்.