உ.பி. அரசு ஏற்பாடு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக உ.பி. அரசு 1000 பஸ்களை ஏற்பாடு செய்திருக்கிறது.
சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.இன்று காலை 9.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இது வரை 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி, உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வேலை பார்த்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல், சாப்பிடக் காசு இல்லாமல் ஊர் திரும்ப பஸ், ரயில் வசதி இல்லாமல் கொடியத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அரசு இன்று(மார்ச்28) முதல் தினமும் 4 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனாலும், தொழிலாளர்கள் தங்குவதற்கு வசதியின்றி பாலத்தின் அடியிலும், சாலையோரங்களிலும் கும்பல், கும்பலாகப் படுத்துத் தூங்குகின்றனர். இவர்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் திட்டமிடாததால் இந்த துரதிஷ்டமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போக முடிவு செய்து 100, 200 கி.மீ. தூரம் நடந்தே செல்லும் காட்சிகள் பல தொலைக்காட்சிகளில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்றிரவு தனியார் வாகன உரிமையாளர்களை அழைத்துப் பேசி, இன்று காலையில் டெல்லி அருகே உள்ள காசியாபாத்திலிருந்து பல ஊர்களுக்கு சுமார் 1000 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து, காசியாபாத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர்.