டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 50 பேர் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள். அந்த மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் கொரோனா பரவியிருக்கிறது.
இந்நிலையில், இன்று(ஏப்.1) காலை 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களைப் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஜெயலலிதா கொண்டு வந்த உன்னதமான திட்டம் அம்மா உணவகங்கள். இந்த அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வளவு மலிவான விலைக்கு விற்பதால், இலவசமாக அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அம்மா உணவகங்களில் தினமும் நாலரை லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.
தப்லிகி மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் 1131 பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் 515 பேரைக் கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். அதில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏனைய நபர்கள் தாமாக முன் வந்து பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் தகுந்த சிகிச்சை அளித்துப் பாதுகாக்க முடியும்.
ஈஷா அறக்கட்டளை நடத்திய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டவர்களால், கொரோனா வைரஸ் பரவியதற்கான அறிகுறி தென்படவில்லை. அப்படித் தெரிந்தால் அனைவரையும் பரிசோதிப்போம். ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பட்டியலைக் கொண்டு பரிசோதனை செய்து வருகிறோம்.தமிழகத்தில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைத்து 17 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. எனவே, ஆந்திராவைப் போல் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டிய தேவையில்லை. ஏப்.14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.