இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைப்பதால், மின்சாரத் தடை பிரச்சனை எதுவும் வராது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்கள் கொரோனா ஒழிப்பில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இன்றிரவு(ஏப்.5) 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், ஒரே சமயத்தில் நாடு முழுவதும் மின்சாரத்தை நிறுத்தினால், மீண்டும் ஆன் செய்யும் போது மின்சார ஓட்டத்தில் ஏற்ற இறக்கம்(வோல்டேஜ் டிராப்) ஏற்படும். அதனால், மின் பாதையில் பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:பிரதமர் அழைப்பு விடுத்துள்ளபடி, மக்கள் இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றலாம். அதேசமயம், ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களை வழக்கம் போல் பயன்படுத்தலாம். அதே போல், தெருவிளக்குகள் அணைக்கப்படாது. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கும்.
மின்சாரத்தை 9 நிமிடங்கள் நிறுத்தி விட்டு, ஆன் செய்வதால் வோல்டேஜ் பிரச்சனைவராது. ஆனாலும், மின்வாரிய அதிகாரிகள் களத்திலேயே இருப்பார்கள். எனவே, பிரச்சசனை ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்யப்படும். எனவே, மின்தடை ஏற்படுமோ என்று யாரும் பயப்படத் தேவையில்லை.
இவ்வாறு தங்கமணி கூறினார்.