திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் இருந்தபடியே அமைச்சர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள், டாக்டர்கள் என எல்லோரிடமும் வீடியோ கான்பரன்சில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று காலையில் பல தலைவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் அவர் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தார். மேலும், தயாளு அம்மாள் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்பு, நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை வழங்குமாறு மோடி கூறினார்.
பிரதமரிடம் உடல் நலம் விசாரித்த ஸ்டாலின், வரும் 8ம் தேதி பிரதமர் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு கருத்து கூறுவார் என்று உறுதியளித்தார். மேலும், பிரதமரைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு பேசினார்.