ஒருவேளை உணவைக் கைவிட பாஜகவினருக்கு மோடி அறிவுரை..

Give up one meal to mark bjp foundation day, Modi tweets j.p.nadda.

by எஸ். எம். கணபதி, Apr 6, 2020, 13:39 PM IST

பாஜகவினர் ஒருவேளை உணவை மக்களுக்கு விட்டுத் தர வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் 40 பேரிடம் சென்று பிரதமர் நிதிக்கு தலா ரூ.100 அனுப்ப வலியுறுத்த வேண்டும். பாஜகவின் 40வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:கொரோனாவை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவின் 40 ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவினர் செயல்பட்டு, மக்களுக்கு உதவ வேண்டும்.


இவ்வாறு குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களையும் பதிவிட்டுள்ளார். பாஜகவின் 40 ஆண்டு தினத்தையொட்டி, பாஜகவினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ள அந்த அறிவுரைகள் வருமாறு:
பாஜக அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் கட்சிக் கொடிகளை ஏற்றுங்கள். கொடியேற்றும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து பாஜக தொண்டர்கள் அனைவரும் ஒருவேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் 5 நபர்களுக்கு உணவு பொட்டலங்களையும், முகக்கவசங்களையும் வழங்குங்கள்.

வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்தல் முறை மற்றும் விநியோகிப்பது தொடர்பான வீடியோக்களை #WearFaceCoverStaySafe என்ற ஹேஸ்டாக்கில் பகிர வேண்டும்.
40 ஆண்டு தினத்தில், ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் 40 பேரிடம் PM-CARES நிதிக்கு தலா 100 ரூபாய் செலுத்த வைக்க வேண்டும்.ஒவ்வொருவரும் 40 வீடுகளுக்குச் சென்று, தற்போது பணியாற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களில் கையெழுத்து பெற வேண்டும். ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் தபால் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு கையெழுத்திடப்பட்ட நன்றி கடிதங்களை நேரில் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

You'r reading ஒருவேளை உணவைக் கைவிட பாஜகவினருக்கு மோடி அறிவுரை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை