அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா மறுத்தால், அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 200 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 3 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதித்திருக்கிறது. அங்கு இது வரை கொரோனாவுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மருந்து, மாத்திரைகளை எல்லா நாடுகளும் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் சாதாரணமாகப் பருவ காலங்களில் மலேரியா காய்ச்சல் பரவக்கூடியது என்பதால், அதிகமாக குளோரோகுயின் தயாரித்து வருகிறோம். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அது பயன்படுகிறது என்பதால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி தடை விதித்திருந்தது. எனினும், ஏற்கனவே இந்தியக் கம்பெனிகள் வெளிநாடுகளில் ஆர்டர் பெற்றிருந்தால், அவற்றை மட்டும் சப்ளை செய்ய அனுமதி அளித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசினார். தங்கள் நாட்டுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் சப்ளை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கோரினார். இது பற்றி பரிசீலிப்பதாகப் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கிடையே, கடந்த 4ம் தேதியன்று ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஏற்கனவே ஆர்டர் பெற்றிருந்தாலும் அதை சப்ளை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:அமெரிக்காவுக்கு இந்தியா தேவையான மருந்து சப்ளை செய்தால், மிகவும் பாராட்டுவேன் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால், இப்போது அதைப் பிரதமர் மோடி அனுமதிக்க மறுத்தால் ஓ.கே.தான். ஆனால், அதற்கான அமெரிக்காவின் பதிலடி இருக்கத்தான் செய்யும்.அமெரிக்காவுக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருக்கிறது என்பதை அறிகிறேன். இது மோடியின் உத்தரவாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் இந்தியா என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.