கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சரும் இல்லை. சுகாதாரத்துறை அமைச்சரும் இல்லை என்று கமல்நாத் கூறியிருக்கிறார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,356 பேராக உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் 235 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இங்கு இது வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் கொரோனா பரவும் அபாயம் இருப்பது குறித்தும், மத்திய அரசின் மெத்தனம் குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த பிப்ரவரி மாதமே எச்சரித்தார். ஆனால், அவர் எச்சரித்து 40 நாட்களுக்குப் பிறகுதான் ஊரடங்கே அமல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகுதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் கடந்த மார்ச் 23ம் தேதி பதவியேற்றார். ஆனால், இது வரை அமைச்சர்கள் பொறுப்பேற்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலைமையில், உள்துறை அமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ இல்லாமல் செயல்படும் ஒரே மாநிலம் மத்தியப் பிரதேசம்தான்.
நான் முதல்வராக இருந்த போது, மார்ச் 8ம் தேதியே பள்ளிகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூட உத்தரவிட்டேன். அந்த சமயத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மாநிலச் சட்டசபைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மத்திய அரசோ, நாடாளுமன்றத்தை நடத்தினார்கள். நாங்கள் சட்டசபையை ஒத்தி வைத்த போது, அதை பாஜகவினர் கிண்டலடித்தார்கள். இப்போது நாடு முழுவதுமே ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சுற்றி 5 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களிலிருந்து 25 முதல் 30 சதவீதம் பேர் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. சவுகான் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது.
இவ்வாறு கமல்நாத் கூறினார்.