கொரோனா ஊரடங்கு காரணமாக, முதல் முறையாக சித்திரை விசு திருநாளில் பத்மநாபசுவாமி கோயில் மூடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்நோய் மேலும் பரவாமல் இருப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி 21 நாள் ஊரடங்கு பின்பற்றப்பட்டது. தற்போது இது மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முதலாகக் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அங்கு வேகமாகப் பரவினாலும் முதல்வர் பினராயி விஜயன் அரசின் செயல்பாடுகளால், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. எனினும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயில் மூடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று(ஏப்.14) சித்திரை விசு திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, இந்த நாளில் பத்மநாபசுவாமி கோயிலில் விசேஷ பூஜைகள் காணப்படும். மேலும் பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். ஆனால், இம்முறை கோயில் அடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே காய்கனிகளுடன் சித்திரை விசு திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.