நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் சேவையும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்.14ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார். ஏற்கனவே ஊரடங்கின் போது நாடு முழுக்க பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதே சமயம், ஏப்.14ம் தேதி ஊரடங்கு முடிவடைவதாக இருந்ததால், ஏப்.15ம் தேதி முதல் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அது வரை பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, முன்பதிவு செய்திருப்பவர்கள் ஆன்லைனில் அதற்கான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.