கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு இன்று பண்ணை வீட்டுக்குள் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில், மணமக்களின் உறவினர்கள் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரை அடுத்துள்ள ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் ஏப்.17ம் தேதியன்று பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், திருமணத்தைத் தள்ளி வைப்பதா அல்லது எளிய முறையில் நடத்துவதா என்று மணமக்கள் குடும்பத்தினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஏற்கனவே நிச்சயித்தபடி திருமணத்தை ஏப்.17ம் தேதியே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ராமநகரா மாவட்டத்தில் உள்ள குமாரசாமியின் பண்ணை வீட்டில் எளிய முறையில் திருமணம் நடத்த உறுதி செய்யப்பட்டது. இது குறித்து குமாரசாமி அளித்த பேட்டியில், தனது கட்சிக்காரர்கள் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம் என்றும், வீட்டிலிருந்தபடியே வாழ்த்துமாறும் கூறியிருந்தார்.இந்நிலையில், குமாரசாமியின் பண்ணை வீட்டில் இன்று திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மணமகன், மணமகள் குடும்பத்தினர் சுமார் 50 பேர் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் செய்து உடல்நிலையைப் பரிசோதித்த பின்பு, வீட்டுக்குள் அனுமதித்தனர். திருமணச் சடங்குகள் அவர்களின் குடும்ப பாரம்பரிய முறைப்படி நடைபெற்றன. திருமணம் எளிமையாக நடைபெற்றது.