நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது.
உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கு சமூக இடைவெளி மட்டுமே பயன்படும் என்பதால், 21 நாள் ஊரடங்கைப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அது கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த போது, மீண்டும் மே 3ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார். இதனால், நாடு முழுவதும் விமானம், ரயில், பஸ் மற்றும் அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளும் மூடப்பட்டிருந்தன.
அதே சமயம், மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான ஆம்புலன்ஸ், மருந்து, பால், உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில தொழில்களுக்கு மட்டும் இன்று(ஏப்.20) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, மத்திய அரசின் கஜானாவுக்கு வருவாய் தரும் சுங்கக் கட்டண வசூலை இன்று முதல் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்தது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் தங்களுக்கு ஒரு மாத இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வரை தர வேண்டுமென்று கோரி வந்தனர். அவர்களுக்கு ஜன்தன் கணக்கு உள்ளிட்டவற்றில் ரூ.500, ரூ.1000 என்று குறைந்த நிதியுதவியையே மத்திய அரசு அளித்தது.இந்த சூழலில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே லாரி தொழிலாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் பாதித்துள்ள நிலையிலும், அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் நிலையிலும், சுங்கக் கட்டணம் வசூலிப்பதா? என்று கண்டனம் தெரிவித்தது.
ஆனாலும் கூட, இன்று அதிகாலை முதல் சுங்கச் சாவடிகள் செயல்படத் தொடங்கின. நாடு முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில் அதிகாலை 1 மணி முதல் கட்டண வசூல் நடைபெற்று வருகிறது.