நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை உலகம் வியந்து பேசும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 26,496 பேருக்குப் பரவியிருக்கிறது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற தனது ரேடியோ உரையில் கூறியதாவது:நாட்டு மக்கள், கொரோனாவுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், அரசு நிர்வாகமும் ஒன்றிணைந்து இந்த போரை நடத்துகின்றன. ஒவ்வொரு மனிதனும் இந்த போரில் ஒவ்வொருவரும் ஒரு வீரராக செயல்படுகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சிலர் வாடகை வசூலிக்காமல் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் கூட பட்டினியுடன் தூங்கக் கூடாது என்று பலர் உதவுகிறார்கள். பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் அந்த பள்ளிக் கட்டிடத்தில் சுண்ணாம்பு அடிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு பணிகளை மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் இப்போது முகக்கவசம் போடுவதற்குப் பழகிக் கொண்டிருக்கிறோம். இது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. நோயாளிகள்தான் முகக்கவசம் போட வேண்டுமென்று கருதக் கூடாது. நாகரீகமான சமூகத்தின் ஒரு பழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல், எச்சில் துப்புவதால் எவ்வளவு துயரம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இனிமேல் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து வெளியேறுவதற்கு மக்கள் நடத்தும் போரை உலகமே வியந்து பேசும். நாம் நிச்சயம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம். கொரோனாவில் இருந்து உலகம் மீண்டது என்ற செய்தியுடன் அடுத்த முறை உங்களிடம் பேசுகிறேன்.இவ்வாறு மோடி பேசினார்.