இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 37,336 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே2) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 37,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 9950 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1218 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 2293 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 71 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கொரோனாவால் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களை சிவப்பு மண்டலமாகவும், குறைந்த பாதிப்புள்ள மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பில்லாத மாவட்டங்களை பச்சை மண்டலமாகவும் பிரித்துள்ளனர். நாடு முழுவதும் 130 சிவப்பு மண்டலங்களும், 284 ஆரஞ்சு மண்டலங்களும் உள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமான சிவப்பு மண்டலங்கள் உள்ளன. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய பெருநகரங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளன.