ஆந்திர மாநிலத்தில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை திடீரென ரசாயன வாயு கசிந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மூச்சுத்திணறலால் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. இங்கு எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற கெமிக்கல் தொழிற்சாலை இருக்கிறது. இங்கிருந்து இன்று அதிகாலையில் திடீரென ரசாயன வாயு கசிந்தது. இது சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.
மக்களுக்குக் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக ஆம்புலன்ஸ் வேன்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். தற்போது அங்கு காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஆந்திர அரசு அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்து, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 1984ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இதே போல் விஷவாயு கசிவு சம்பவம் நடந்தது. அப்போது, யூனியன் கார்பைடு கம்பெனியில் விஷவாயு கசிந்து 3500 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.