இந்தியாவில் இன்று(மே8) காலை நிலவரப்படி, 56342 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 17,894 பேருக்குத் தொற்று உறுதியானது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 8) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 56,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில்16,539 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1886 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3561பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 89 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இது வரை 17,894 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 694 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மும்பையில் மட்டுமே எடுத்துக் கொண்டால், 11,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 7013 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 425 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் அகமதாபாத்தில்தான் 6 ஆயிரம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது.
தமிழகத்தில் 5409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 40 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.