மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் மீது சரக்கு ரயில் ஏறியதில், அதே இடத்தில் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். அவர்கள் சாலை வழியாகச் செல்லாமல், ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்றனர்.
அவுரங்காபாத் அருகே கர்மாடு என்னும் ஊருக்கு அருகே சென்ற போது சோர்வடைந்தனர். இதையடுத்து, நேற்றிரவு தண்டவாளத்தின் மீதே படுத்துத் தூங்கினர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் நன்டெட்டில் இருந்து மன்னாடு நோக்கிச் சென்ற சரக்கு ரயில், தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகள் மீது ஏறிச் சென்றது. இதில், 16 பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைப்பேசியில் விசாரித்தனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசி விவரம் அறிந்தேன். அவர் விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, விபத்து குறித்து வேதனை தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.