இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 2109 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவில் தோன்றிய உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவி வருகிறது. நோய்ப் பரவல் இதுவரை கட்டுப்படவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 10) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 62,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 154 பேரையும் சேர்த்து 19,358 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2109 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 127 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 20228 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 779 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 7796 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 472 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 66,542 பேர் கொரோனா பாதித்துள்ள நிலையில், 73 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 3373 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 1499 பேர் குணமடைந்துள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 1930 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 887 பேர் குணமடைந்துள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 1786 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 373 பேர் குணமடைந்துள்ளனர். 171 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் 6535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 45 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.