பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. வழக்கமாக, மத்திய அரசின் சார்பில் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இப்படித் திரட்டப்படும் தொகை கணக்கு வைக்கப்படும்.
ஆனால், இந்த முறை பிரதமர் மோடி தனியாக பி.எம். கேர்ஸ் என்ற ஒரு நிதி அமைப்பை உருவாக்கினார். இந்த நிதிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் நிதிக்கு வருமான வரி விலக்கு தரப்படுகிறது. பிரதமர் மோடி தலைவராகவும், மத்திய அமைச்சர்கள் சிலர் உறுப்பினர்களாகவும் கொண்ட டிரஸ்ட் ஆக இந்த நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த டிரஸ்ட் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிதி எங்கே போகிறது என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், பிரதமரின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.3100 கோடி, கொரேனா தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.2000 கோடி வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும், ரூ.100 கோடி, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும் வழங்கப்படும்.
ரூ.2 ஆயிரம் கோடியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும். ரூ.1000 கோடியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இடம், மருத்துவ வசதி செய்து தர மாநிலங்களுக்கு அளிக்கப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 50 சதவீதமும், கொரோனா பாதிப்புக்கு 40 சதவீதமும் முக்கியத்துவம் அளித்து அதனடிப்படையில் ஒதுக்கப்படும். மீதி 10 சதவீதம் எல்லா மாநிலங்களுக்கும் சரிவிகிதத்தில் பிரித்துத் தரப்படும்.கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.100கோடியில் உதவப்படும்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.