மேற்குவங்கம்- வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயல் பாதிப்புகளைச் சமாளிப்பது குறித்து மம்தா பானர்ஜி, நவீ்ன் பட்நாயக் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலைக்குள் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேச நாட்டின் ஹட்டியா தீவுக்கு இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அம்பன் புயலால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சமாளிப்பதற்கு மத்திய அரசு உதவத் தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அமித்ஷா பேசினார். இருமாநிலங்களிலும் முன்னேற்பாடுகளை விசாரித்தறிந்த அவர் மத்திய அரசின் சார்பில் உதவுவதற்கும், பேரிடர் மீட்பு படைகளை அனுப்புவதற்கும் உறுதியளித்தார்.