இந்தியாவில் வரும் 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், உள்நாட்டு விமானச் சேவையும் வரும் 25ம் தேதி தொடங்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் புரி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக வந்து விட வேண்டும். பயணிகள் கண்டிப்பாக ஆரோக்கிய சேது அப்ளிகேஷன் டவுன்லோடு செய்திருக்க வேண்டும். விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், இதைப் பரிசோதிப்பார்கள். அதே சமயம், குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பயணிகள் விமான நிலையங்களுக்கு தமது சொந்த வாகனம் அல்லது அனுமதிக்கப்பட்ட டாக்ஸியில்தான் வர வேண்டும். பயணிகள் அனைவருக்கும் கண்ணாடி கவசம் அளிக்கப்பட வேண்டும். விமானங்களில் நடு இருக்கை காலியாக விடப்பட வேண்டும். இது போன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.