கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளால், லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 500, 1000 கி.மீ. நடைப்பயணமாகச் செல்கின்றனர். சரக்கு வாகனங்களில் செல்கின்றனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் விபத்துகளில் பலியாகியுள்ளனர். அதே சமயம், மத்திய அரசோ மாநில அரசுகளின் மீது பொறுப்பைச் சாட்ட விட்டு, குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ள இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பங்கேற்கின்றனர்.
இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக பக்கம் சாய்ந்து விட்ட ஆம் ஆத்மி கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறது. சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என அறிவிக்கவில்லை.
மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அவர் பங்கேற்பாரா அல்லது வேறொருவரைப் பங்கேற்கச் செய்வாரா எனத் தெரியவில்லை. காரணம், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பார்வையிடப் பிரதமர் மோடி அங்குச் செல்கிறார்.