கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பினராயி விஜயன் அரசு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கிய நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது வரும் 26ம் தேதி முதல் அந்த தேர்வுகளை நடத்துவதற்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், தேர்வுகளை நடத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களை தெர்மல் ஸ்கேன் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்பே அறைக்குள் அனுமதிக்க வேண்டும். பேனா, பென்சில் எந்த பொருளையும் ஒரு மாணவரிடம் இருந்து இன்னொரு மாணவருக்கு தர அனுமதிக்கக் கூடாது.
கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்களை தனி அறைகளில் அமரவைத்து தேர்வு நடத்த வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அந்த மாணவர்களை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
தேர்வு அறைகள் அனைத்தும் முதல் நாளே கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஏ.சி. வசதி இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். இது போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.