டி.என்.பி.எஸ்.சி ஊழல் வழக்குகளைப் புலனாய்வு செய்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.டிஜிபி ஜாபர்சேட், கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாபர்சேட், டம்மிப் பதவிக்கு மாற்றப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இதன்பின்னர், கடந்த ஆண்டில் அவருக்குப் பதவி உயர்வும், புதிய பொறுப்பும் அளிக்கப்பட்டது. குற்றப்புலனாய்வு சி.ஐ.டி பிரிவின் டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுதான் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த டி.என்.பி.எஸ்.சி வழக்குகளை விசாரித்து வந்தது. இதில், பல ஊழியர்கள், இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டாலும், ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜாபர்சேட் திடீரென மாற்றப்பட்டு, சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி பிரிவு புதிய டிஜிபியாக பிரதீப் பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இது வரை சிவில் சப்ளை டிஜிபியாக இருந்து வந்தார்.