மேற்குவங்கத்தில் ஜூன் 30ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக, பிரதமர் மோடி அறிவிப்பின்படி நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின், ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. எனினும், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதே சமயம், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படாததால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பஸ், வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கின்றன.இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புடன், அம்பன் புயல் பாதிப்பும் அதிகமாக உள்ளது. இதனால், அங்கு வீடு இழந்தவர்கள் பள்ளி கட்டடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா பரவல் மற்றும் புயல் நிவாரணப் பணிகள் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்குத் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். அவற்றைத் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.