ஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. பிரதமர் மோடி பேச்சு

PM Modi talks about migrants, caution and Yoga.

by எஸ். எம். கணபதி, May 31, 2020, 14:31 PM IST

ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றாலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரம் கி.மீ. தூரம் கூட நடந்தே சென்றனர். பலர் உயிரிழந்தனர். இதனால், மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன. எனினும், இது வரை வாய் திறக்காமலிருந்த பிரதமர் மோடி தற்போது முதல் முறையாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றிப் பேசியுள்ளார்.பிரதமர் மோடி இன்று தனது வழக்கமான மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் கிருமி பரவிய இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். உலக நாடுகளை ஒப்பிடுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாடு இந்த சவாலைச் சந்திப்பதில் மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறது. எதையெல்லாம் சாதித்தோமோ அதெல்லாமே கூட்டு முயற்சியால் தான். அதே போல், எதையெல்லாம் இழந்தோமோ அதற்காகவும் நாம் வருந்துகிறோம்.

இந்த தருணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டோம். குறிப்பாக, ஏழைகளின், தொழிலாளர்கள் பட்ட துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதே சமயம், ரயில்வே நிர்வாகம் 24 மணி நேரமும் கொரோனா மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களைக் கொண்டு சேர்ப்பதிலும், பல லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் பணியாற்றியுள்ளது. மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் எல்லாருமே இரவு பகலாக பணியாற்றியுள்ளோம்.

இந்த தருணத்தில் நான் பல நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய போது, அவர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பலன்கள் குறித்து அறிந்தனர். நாமும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You'r reading ஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. பிரதமர் மோடி பேச்சு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை