கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்த நிலையில், அம்பன் புயல் தாக்கியதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புயலால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. ஏராளமான ஏக்கர் பயிர் நாசமடைந்தன.
இந்நிலையில், புயல் பாதிப்புகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்தார். ஆனால், இது போதாது என்று மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ஒரு லட்சம் கோடி கேட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி.
தற்போது, வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் மழையால் வீடுகள் இழந்த 5 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 வழங்கியுள்ளதாகவும், பயிர்கள் நாசமடைந்ததால் 23 லட்சம் பேருக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளதாகவும் மம்தா அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளதாகவும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.