இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை இந்நோய்க்கு 6075 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா, இந்தியாவில் தற்போதுதான் வேகமாகப் பரவி வருகிறது. 5வது ஊரடங்கு முடியும் தருவாயில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால், நேற்றைய பரிசோதனையில் அதிகபட்சமாக 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டுமே 254 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2லட்சத்து 16,919 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 4107 பேர் குணமடைந்துள்ளனர். இது நோய் பாதித்தவர்களில் 48 சதவீதமாகும். அதேசமயம், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 6075 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 70 லட்சம் பேருக்கும், தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.