சூரத் நகரில் ஜவுளி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விற்பனை மந்தமாக உள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீன வைரஸ் நோயான கொரோனா, உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2.36 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதியன்று 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், தொடர்ச்சியாக 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், குஜராத்தில் தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சூரத் மிகப் பெரிய வர்த்தக நகரமாகும். ஜவுளி விற்பனைக்கும், வைர விற்பனைக்கும் சூரத் மிகவும் பிரபலமானது. சூரத்தில் ஏராளமான ஜவுளி சந்தைகள் உள்ளன.தற்போது ஜவுளிச் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், ஜவுளி வியாபாரம் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
இதற்கிடையே, ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், மார்க்கெட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதிப் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் திரும்பி வருவதென்றாலும், வந்தவுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். மேலும், ஜவுளி சந்தைக்குத் தேவையான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்றனர்.