குஜராத்தில் பாஜக ஆள் இழுப்பு வேலையைத் தொடங்கியதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 65 பேர் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்படப் பல மாநிலங்களில் காலியாக உள்ள 24 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கில் பேரம் பேசி இழுப்பதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது. இதைத் தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ, மீடியாக்களோ பெரிதாகக் கண்டுகொள்வதே இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது என்று யாருமே வாய் திறப்பதில்லை. மாறாக, காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டு அந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாகச் செய்திகள் பரப்பப்படும்.
கோவா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த ஜனநாயக அசிங்கங்களை அரங்கேற்றிய பாஜகவால், மகாராஷ்டிராவில் மட்டும் இதைச் சாதிக்க முடியவில்லை. காரணம், அங்கு பாஜகவுக்கு குருவாக உள்ள சிவசேனா வெகுண்டு எழுந்ததுதான்.
இந்நிலையில், குஜராத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபையில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 2 இடம் கிடைக்கும். ஆனால், காங்கிரசின் 2ல் ஒன்றைத் தட்டிப் பறிப்பதற்காக அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்சய் படேல், ஜித்து சவுத்ரி, பிரிஜேஷ் மெர்ஜா ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்களை இதே போல் பதவி விலகச் செய்ய பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. தற்போது காங்கிரசில் 65 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் சிலரை இழுத்து விட்டதால், காங்கிரசால் ஒரு எம்.பி. இடத்தை மட்டுமே பிடிக்க முடியும்.
இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் அந்த 65 எம்.எல்.ஏ.க்களையும் வழக்கம் போல் ஓட்டல் மற்றும் ரிசார்ட்களில் தங்க வைத்துள்ளனர். ராஜ்கோட்டில் உள்ள நீல் சிட்டி ரிசார்ட்டில் 40 எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதி எம்.எல்.ஏ.க்கள், வதேதராவில் உள்ள ரிசார்ட், ராஜஸ்தானில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.