கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையில் இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருந்தாலும், பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் சுமார் 100 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 19 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வரிசையில் இருந்தன.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா இருந்து வந்தது. அதன்பின், ஒவ்வொரு நாட்டையும் விடப் பாதிப்பு அதிகமாகி 6வது இடத்திற்கு வந்திருந்தது. இந்நிலையில், நேற்றிரவு ஸ்பெயினை முந்தி 5வது இடத்திற்கு வந்துள்ளது.
தற்போது, அமெரிக்காவில் 19 லட்சத்து 6060 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. ஒரு லட்சத்து 9791 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 6 லட்சத்து 14,941 பேருக்கும், 3வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 4 லட்சத்து 58,102 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
5வது இடத்திலிருந்த ஸ்பெயினில் 2 லட்சத்து 41,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 2 லட்சத்து 46,549 ஆக அதிகரித்தது. இதையடுத்து, கொரோனா பரவலில் உலக நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தை இந்தியா பிடித்தது. ஸ்பெயின் 6வது இடத்திற்குச் சென்றது.இந்தியாவில் தற்போது தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால், விரைவில் இந்தியா இங்கிலாந்தையும் முந்தி 4வது இடத்திற்குச் செல்லும் எனத் தெரிகிறது.